இரவின் சுதந்திரம்


Independence day
67th Independence Day


எத்தனையோ தலைவர்கள் போராடி தங்கள் இன்னுயிரை இழந்து போராடி அடைந்த சுதந்திரம் இது .இன்று நம் இந்தியாவின் 67 சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த 67 வருடத்தில் இந்தியா பல மகத்தான சாதனைகளை செய்துள்ளது.இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு புறம் நாம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மறுபுறம் இன்றும் அன்றாட தேவைகளுக்காக போராடி கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நாம் ரூபாயின் மதிப்போ அகல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.நம்மை விட குட்டி குட்டி தீவுகளெல்லாம் நம்மை விட பல மடங்கு வேகத்தில் முன்னேறி கொண்டிருக்க மனித வளம் உட்பட எல்லா வளங்களும் உடைய நாமோ அவர்களை அன்னார்ந்து பார்த்து அவர்களிடம் இன்னமும் கை நீட்டிக் கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளாக வளரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் நாம் எப்பொழுது வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேருவோம் என்று கணிக்கவே முடியாத சூழ்நிலை தான் உள்ளது.

எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் வந்துவிட்டன ஆனால் மக்களின் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இது வரை ஏற்படவில்லை. அரிசி,கோதுமை மற்றும் பல பொருட்களை இலவசம் என்று அரசு அறிவித்தால் மகிழ்ச்சி அடையும் நாம் அதை வாங்குவதர்க்குக் கூட வழியில்லாமல் இருக்கிறோம் என்பதை மட்டும் உணர்வதே கிடையாது. இன்றைய நிலையில் ஒரு கூலி வேலை செய்பவனின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே இலவசமாக வழங்கப்பட்டதே எனில் அவன் எந்த அளவு பொருளாதாரத்தில் பின்னடைந்திருப்பான். கொஞ்சம் சிந்தியுங்கள். என்றாவது நாம் இலவசங்கள் எங்களுக்கு வேண்டாம் அதை வாங்குவதற்கான பொருளாதார வசதியை ஏற்படுத்தி கொடுங்கள் என்று கேட்டிருக்கிறோமா ,இல்லவே இல்லை.  இலவசங்கள் எதற்கு என்று அரசிடம் கேட்டால் அரசின் பதில் மக்களை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கான வழிமுறை. இதற்க்கு பெயர் முன்னேற்றமா ?

ஒரு சராசரி குடிமகனின் அடிப்படை தேவைகளை கூட அவனால் நிறைவேற்றி கொள்ள முடியாவிட்டால் அங்கு எந்த வகையான முன்னேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.உணவை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு இல்லாத உரிமை மண்ணிலிருந்து பொருளை எடுத்து விற்கும் வியாபாரிக்கு உள்ளது.அரிசி ,கோதுமை என்று இலவசமாக கொடுக்கும் அரசு ஏன் வீட்டுக்கு இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல்,டீசல் ,மண்ணெண்ணெய் கொடுத்தால் என்ன,ஏன் எங்கள் விவசாயி மட்டும் சாதரணமாக தெரிகிறானா?

இங்கு அரசை தேர்ந்தெடுக்கும் முறை அதை விட கொடுமை.கேட்டால் ஜனநாயக முறையாம், இங்கு பெரும்பாலும் ஓட்டுக்கு எவ்வளவு தருகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு அந்த பணமே மக்களிடம் கொள்ளை அடித்தது தான் என்று புரியாமல் நம் பணத்தை நமக்கே கொடுத்து அதை வேறு வழியில் மீண்டும் பெற்று விடுகின்றனர்.இன்றைய அரசியல் முறை நல்ல தலைவனை உருவாக்குகிறதோ இல்லையோ நன்கு பணம் சம்பாதிக்கும் முறையை நன்கு உருவாக்குகிறது.நம் அரசியல் கட்சிகள் எதில் சாதனை படைக்கிறார்களோ இல்லையோ ஊழல் செய்வதில் எந்த நாட்டினரும் அடித்துக்கொள்ள முடியாது.இந்த போட்டியை நாட்டின் முன்னேற்றத்தில் காட்டினால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

மாற்றங்களை உருவாக்கும் கல்வித்துறை கண்ணே தெரியாமல் விழியிழந்து கிடக்கிறது. எத்தனையோ ஆட்சிகள் மாறியும் 50 வருட கல்வி முறையில் எந்த மாற்றமும் இல்லை.இதில் எங்கு போட்டி போடுவது வெளிநாட்டு மாணவனுடன்.கல்வி கூடங்களும் அதை நடத்துபவர்களின் பொருளாதாரமும் முன்னேறியதே தவிர அங்கு படித்த மாணவர்களின் நிலைமை அதே நிலை தான் எந்த மாற்றமும் இல்லை.

நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை நினைக்கவே பாவமாக உள்ளது. கடன் கொடுக்க ஒரு சாராய கம்பெனிக்கு கொடுக்கும் முன்னுரிமை கூட  எந்த ஒரு விவசாயிக்கும் கொடுப்பதில்லை.அதன் விளைவு இன்று விவசாயம் வீழ்ச்சி பாதையை நோக்கி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.விளை நிலங்களெல்லாம் விலை நிலங்களாக மாறி வருகிறது.இன்னும் 50 வருடத்தில் நாம் உணவிற்காகவும் வெளிநாடுக்காரனிடம் கையேந்தும் நிலைமை வந்தாலும் வரலாம்.  

இதற்கெல்லாம் அரசை சொல்லி என்ன செய்வது ஒரு திரைப்படம் வெளிவராவிட்டால் தெருவில் இறங்கி போராடும் நமக்கு, நம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது மட்டும் போராட ஒரு தலைவனும் நேரமும் தேவைப்படுகிறது.பின் மாற்றம் எப்படி உண்டாகும்.கடைசி வரை மாற்றம் வேண்டும் வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.எவனோ ஒருவன் விலை மதிப்பில்லாத நம் இயற்கை வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறான்.நாமோ அவன் போட்ட சில்லறைகளை எண்ணிகொண்டிருக்கிறோம்.ஏற்க்கனவே நாம் பல வளங்களை இழந்து விட்டோம்,இனியும் தொடர்ந்தால் நாளைய தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்ல போகிறோம்.

இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கியதே இந்த நாட்டின் ஒரு சிறு முன்னேற்றத்திலும் நம் அனைவரின் பங்கும் உள்ளது.இனி வரும் நாட்களை நம் முன்னேற்றத்துடன் நாட்டின் முன்னேற்றத்தையும் மனதில் வைத்து முன்னேறுவோமாக.இனி வரும் அரசுகளாவது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்லும் என்று நம்புவோம்.நாட்டை நேசிக்கும் அனைவருக்கும்

           இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 


இரவின் சுதந்திரம் இரவின் சுதந்திரம் Reviewed by Unknown on Thursday, August 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.