கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் தொலையும் அடையாளம்

 
Gangai Konda Cholapuram

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் பல்வேறு காலங்களை தாண்டி சீர்மிகு சிறப்புடன் உலகிற்கு எடுத்துக்காட்டிய மூவேந்தர்கள் சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள். இதில் சோழர்களும் , பாண்டியர்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தான் பாண்டியன். கங்கை வரை வெற்றி கொடி நாட்டி தமிழனின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டினான் சோழன்.
 
தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சிறப்புமிகு அரசர்களில், இமயத்தில் முதன் முதலில் கொடி நாட்டிய முதல் தமிழன் கரிகால் பெருவளத்தான், கப்பற்படை அமைத்து கடல்கடந்து வெற்றிகளை குவித்தான் ராஜராஜசோழன், கங்கை வரை வெற்றி பெற்று கங்கை நீரை தமிழகம் கொண்டு வந்தான் ராஜேந்திர சோழன். மலைகளை குடைந்து கோவில்களை எழுப்பினான் பல்லவ அரசன் மகேந்திர நரசிம்மன். இன்னும் எத்தனை எத்தனையோ அரசர்கள் காலம் காலமாக தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர்கள் உருவாக்கிச்சென்ற அடையாளங்கள் எல்லாம் காலத்தின் மாற்றம் மற்றும் மக்களின் நாகரீக வளர்ச்சியால் இன்று அழியும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
 
எங்கோ ஒரு உலகின் மூலையில் இருந்து படையெடுத்து வந்த அலெக்ஸாண்டர் நினைவில் இருக்கும் அளவிற்கு தமிழனின் பெருமையை நிலைநாட்டிய கரிகால் சோழனோ, ராஜராஜசோழனோ , ராஜேந்திர சோழனோ மற்றும் மகேந்திர நரசிம்ம பல்லவனோ நமக்கு நினைவில் இல்லை. இவர்களும் பல போர்களை வெற்றியுடன் முடித்த மாவீரர்கள் தான். ஆனால் இவர்களின் அடையாளங்களால் மட்டுமே இவர்கள் இன்று மக்கள் மனதில் நிற்கிறார்கள். கல்லணை கட்டினான் கரிகாலன், தஞ்சை பெரிய கோவிலை நிறுவினான் ராஜராஜன், கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான் ராஜேந்திர சோழன் மற்றும் மகாபலிபுரத்தை நிறுவினான் மாமல்லன் என்று பெயரெடுத்த மகேந்திர நரசிம்மன். இந்த அடையாளங்கள் அழியும் பொழுது இவர்களின் பெயர்களும் வரலாற்றிலிருந்து சேர்ந்து நீங்கும். நம் அண்டை தீவான இலங்கை, இன்று நமக்கு மீன் பிடிக்கும் உரிமை கூட இல்லாத பகுதி , ஒரு காலத்தில் தமிழனின் ஆளுமைக்கு அடிபணிந்து கிடந்தது. கடல் கடந்து வெற்றிகளை குவித்த ஒரே இந்திய அரசன் தமிழனான ராஜராஜசோழன். 
 
இவர்களை தவிர்த்து இன்னும் எத்தனையோ அரசர்கள் பல செயற்கறிய செயல்களை ஆற்றியுள்ளனர். அவர்களின் அடையாளங்கள் எல்லாம் வெளியுலகிற்கு தெரியாமலே மறைந்து விட்டன அல்லது மறைக்கப்பட்டு விட்டன. சோழர் வம்சம், கடல் கொண்ட காவிரி பூம்பட்டினத்தில் தொடங்கி பின்னர் கரிகாலன் காலத்திலே உறையூரை தலைநகராக்கி வளர்ந்தது பின்னர் விஜயாலய சோழன் காலத்தில் தஞ்சை தலைநகராக மாறியது. இறுதியாக தன் தந்தையான ராஜராஜ சோழன் நினைவாக தனையனான ராஜேந்திர சோழன் கங்கை வரை பெற்ற வெற்றியை சிறப்பிக்கும் விதமாக கங்கை கொண்டசோழபுரம் என்னும் நகரை நிர்மாணித்தான். அதையே சோழ வம்சத்தின் தலை நகராக்கினான். சோழ வம்சத்தின் இறுதிகாலம் வரை அதுவே தலைநகராக இருந்தது. அங்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை போன்று மற்றும் அதை விட அதிக சிற்பங்கள் நிறைந்த கோவிலை உருவாக்கினான். இருவேறு கோவில்களிலும் வழங்கும் தெய்வங்களும் ஒரே பெயரை கொண்டே அழைக்கப்படுகின்றது.அந்நகரின் தேவைக்காக சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினான்.
Remaining Gangai Konda Cholapuram
Gangai Konda Cholapuram
Angalan Gangai Konda Cholapuram
வேதனை என்னவெனில் இன்று அந்த கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை கல்மேடுகலாக மட்டுமே காணமுடிகிறது. நகரம் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இன்று இல்லை, அங்கு மாளிகை அமைந்திருந்த இடம் மட்டும் மாளிகை மேடு என்ற பெயரால் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலின் பெரும்பாலான பகுதிகள் பல்வேறு காலகட்டங்களில் பல படையெடுப்புகளில் அழிக்கப்பட்டும், மக்களின் அறியாமையாலும் இன்று சிறு பகுதியாக காட்சியளிக்கிறது. கோவிலை சுற்றி பார்க்கும் பொழுது கற்பனை வளமிருப்பின் கோவில் எவ்வளவு பிரமாண்டங்களுக்கு சொந்தமாக இருந்திருக்கும் என்று தெரியும். இன்று எஞ்சியிருப்பது மூலவர் தலம் மற்றும் ஒன்றிரண்டு கட்டிடங்கள் மட்டுமே. நாம் இழந்து கொண்டிருக்கும் முக்கிய அடையாளங்களுள் ஒன்று இந்த கோவில்.
Gangai Konda Cholapuram Gopuram
Gangai Konda Cholapuram
கோவில் என்பது வழிபாட்டுக்குரிய தலம் மட்டும் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம். மொழி, கலாச்சாரம் மற்றும் கலைகளின் தலைமுறை பரிமாற்றத்திற்க்குரிய இடங்கள் அவை. ஒரு இனம் இவ்வளவு சிறப்பாக வாழ்ந்து, வளர்ந்து இருந்திருக்கிறது என்பதை கோவிலை தவிர நாம் வேறு எங்கும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. தமிழர்கள் கலைகளில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை ஆசியாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கோவில் சிற்பங்கள் உலகிற்கு எடுத்துக் கூறும். ஆசிய கண்டத்தின் பல பகுதிகளை தமிழர்கள் ஆண்டார்கள் என்பதை பல்வேறு கல்வெட்டுக்களும், நினைவுச் சின்னங்களும் எடுத்துறைக்கும்.

Gangai Konda Cholapuram
Arthanareeswarar-Gangai Konda Cholapuram
Nandhi(Bull) Statue-Gangai Konda Cholapuram
இன்று ஏனோ மேற்கத்திய நாகரீக மோகம் மற்றும் முற்போக்கு எண்ணங்களின் தாக்கத்தால் கோவில்கள் என்பது வயதானவர்களுக்கு மட்டும் என்ற மன எண்ணம் உருவாகிவருகிறது. பெரியார் சாதிய தொல்லைகளால் கடவுள்களை இல்லை என்றார், ஆனால் அதனால் ஏற்பட்ட ஒரு இழப்பு கோவில்களிள் உள்ள நமது கலைகளும் அடையாளங்களும் போற்ற தகுதியற்றவை என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இங்கு நான் எடுத்து கூறியவை நான் கண்ட, கேட்ட, அறிந்த தகவல்களே இன்னும் எத்தனை எத்தனையோ அடையாளங்களை கால மாற்றத்தால் நாம் இழந்து விட்டோம் ,இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம். 
 
எந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மக்களின் பார்வை இவற்றிலிருந்து விலகியதோ அதே தொழில்நுட்பத்தை மதிநுட்பத்துடன் கையாண்டால் நாம் இழந்துகொண்டிருக்கும் பல அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும். இன்று எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் நம் முன்னோர்கள் எவ்வளவு சீர்மிகு சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்று அறியும் பொழுதே ஒரு இனத்தின் சிறப்பு முழுமையாக அடுத்த தலைமுறைக்கும் பரிமாறப்படும். இல்லையெனில் நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்களையே அடுத்த தலைமுறை மாவீர்களாக எண்ணிக்கொண்டு, நம்மவர்களை வரலாற்றிலிருந்து மறந்து போகலாம். விழித்தெழுவோம்.
கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் தொலையும் அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் தொலையும் அடையாளம் Reviewed by Unknown on Tuesday, January 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.