மனிதத்தை மீட்டெடுத்த மாமழை

சிங்கார சென்னை, உலகின் தலை சிறந்த நகரங்களுள் ஒன்று, ஆசியாவின் நீண்ட கடற்கரையை உடைய மாநகரம். உலகின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பிய நகரம். இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளுக்கு உரிய நகரம். அனைத்து பெருமைகளையும் மூன்று நாள் மழையில் தொலைத்து விட்டது. ஆனால் இத்தனை பெருமைகளை இழந்தாலும், சென்னையை ஒப்புமையில்லாத மனித நேயம் என்னும் அற்புத சக்தி மீட்டெடுத்துள்ளது.
Chennai Humanity

மழை துவங்கும் சில நாட்கள் முன் நாட்டின் அனைத்து செய்தி ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரம் “அமீர்கான் மனைவி இந்தியா பாதுகாப்பான நாடாக இல்லை, இங்கு மத சகிப்புத்தன்மை இல்லை” என்று கூறியதாக பரவிய செய்தி. எல்லா சமூக வலைதலங்களையும் ஆக்கிரமித்த ஒரு பெரிய விவாதம். வருங்கால இந்தியாவின் தூண்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் முதல் கொண்டு அனைவரும் தங்களுக்குள் கருத்துக்களால் மோதிக்கொண்டிருந்த பொழுது. இயற்கைக்கும் இவர்களின் விவாதம் மேல் கோவம் வந்ததோ என்னவோ தெரியவில்லை, இல்லாத ஒரு மாயையை உடைக்க மாமழையை பொழிய துவங்கியது. ஓரிரு நாள் மாமழையால் மாநகரம் தண்ணீருக்குள் முடங்கியது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். எந்த ஒரு வடஇந்திய ஊடகங்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் எங்களுக்கு உங்களின் எந்த உதவியும் தேவையில்லை. எங்களை பாதுகாக்க நாங்களே போதும் என்று நாளைய இந்தியாவின் தூண்கள் யாரென்று அனைவருக்கும் உணரவைக்கத் களம் இறங்கினர் இன்றைய இளம் புரட்சியாளர்கள். அது நாள் வரை ஒரு நடிகனுக்காகவும், மதத்துக்காகவும் தத்தமது கருத்துக்களால் சமூக வளைதளங்களில் மோதிக்கொண்டிருந்த அத்தணை இளைஞர்களும் மாமழையில் மூழ்கிய சிங்கார சென்னையை தூண்களாய் மாறி தாங்கி பிடிக்க துவங்கினர். இன்றை இளைஞர்களுக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லை என்று கூறியவர்களெல்லாம் வெள்ளத்தில் முழுகி தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது, பொறுப்பில்லாதவர்கள் என்று பெயரெடுத்தவர்களெல்லாம் உதவி புரிய வீதியில் களமிறங்கினர். வெட்டி கருத்து பகிர்ந்த சமூக வலைத்தளங்கள் உதவிக்கரம் நீட்ட பகிர்ந்தனர்.
நிச்சயம் இன்றைய மத்திய, மாநில அரசு கூட இந்த மாபெரும் எழுச்சியை எதிர் பார்த்திருக்கமாட்டார்கள். அவ்வளவு இளம் படையினர் ஆண்கள், பெண்கள் என்று எந்த வேறுபாடும் இன்றி களம் கண்டு நம் சிங்கார சென்னையை மீட்டெடுக்க உதவியுள்ளனர்.
மாட மாளிகையும் ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதற்கேற்ப கோடிகளில் வாங்கிய வீடுகளும் தண்ணீருக்குள் முழுகி விட, சாலையில் நடப்பவர்களை கூட கவனிக்காமல் பறந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீருக்கு முழுகி போக, அது நாள் வரை மூடியிருந்த ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் என்னும் மாயை உடைந்து நேசக்கரம் நீட்டும் அனைவரையும் மனிதனாய் மதிக்கும் பக்குவத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தது இந்த மாமழை என்று நிச்சயம் கூறியே ஆக வேண்டும். கோவில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயம் போன்ற வழிபாட்டுத்தலங்கள் எங்கும் மனிதர்களை மட்டுமே காண முடிந்தது, மதத்தை காண முடியவில்லை. வாக்கு கேட்கும் பொழுது பாய்ந்து வருவோம், பறந்து வருவோம் என்று கூறியவர்கலெல்லாம் எங்கு ஓடி ஒளிந்து கொண்டிருந்தனர் என்று மழை நின்ற பிறகே தெரிந்தது. இன்றைய போலி அரசியல் வியாதி வந்தவர்களால் பிரித்தாளப்பட்ட மக்களை ஒரு மாமழை ஒன்றிணைத்துள்ளது. இராணுவம் களம் இறங்கும் முன் இந்த இளம் படை களமிறங்கியது. இளைஞர்கள் என்றால் இளம் வயதினர் என்றில்லை. மக்களுக்காக களம் இறங்கிய அனைத்து நல் இதயங்களுமே இளைஞர்கள்தான்.
சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்சியான உண்மைகள் கண்கலங்க வைக்கிறது. ஒரு இந்து குழந்தைக்கு ஒரு இஸ்லாமியரின் பெயரை சூட்டும் அளவுக்கு மக்களை பக்குவப்படுத்தியுள்ளது இந்த மழை. கங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கும் என்பார்கள் இந்த மாமழை கங்கையை விட ஆயிரம் மடங்கு புனிதமாக மக்களை மாற்றியுள்ளது. இதை இயற்கையின் தவறு என்று கூறுவதை விட இது நாள் வரை நாம் செய்த தவறுக்கு சிறிய அளவுக்கு தண்டனை கொடுத்துள்ளது. என்றைக்கும் இயற்கையின் முன் அனைவரும் சமமானவர்கள் என்று நமக்கு உணர்த்தியுள்ளது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள ஒவ்வொரு சாமானிய குடிமகனும் தங்களால் ஈன்ற உதவியை இன்று செய்துள்ளனர்.
இன்றைய இளைய சமுதாயம் நினைத்தால் எந்த ஒரு பேரழிவிலிருந்தும் மீண்டெழும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மறைந்த அய்யா அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா நிச்சயம் இந்த ஒரு எழுச்சியை எண்ணி மகிழ்ந்திருக்கும். இன்றைய இளைஞர்கள் அனைவருமே நாயகர்களாக உருவெடுத்துள்ளனர். மத சகிப்புத்தன்மையின்மை என்ற மாயையை தகர்த்தெறிந்துள்ளனர்.
இந்த ஒரு எழுச்சி எல்லா நிலைகளிலும் ஏன் இல்லை என்று தெரியவில்லை. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பொழுதும், இவ்வளவு ஏன் தம் மாநில விவசாயிகள் தஞ்சையில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும், இன்னும் பல அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் பொழுது இவ்வளவு எழுச்சி ஏன் ஏற்படவில்லை?. சமூக வலைத்தளங்களை கையாளும் ஆளுமை ஏர் ஓட்டும் விவசாயிடம் இல்லை அதை விரல் நுனியில் வைத்திருக்கும் நகரத்து இளைய சமுதாயத்துக்கு அவர்களுகாக போராட ஏன் மனம் வரவில்லை? எங்களுக்கு ஒன்று வந்தால் மட்டும் தான் நாங்கள் ஒன்றிணைவோம் என்று எண்ணுவது ஏன்? இன்னும் பல கேள்விகள் என்னுள் எழுகின்றது அனைத்திற்கும் விடை தெரியாமல், இந்நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கையுடன் மனிதத்தை மீட்டெடுத்த இந்த மாமழைக்கு ஒரு வகையில் நன்றியையும், எம் மக்களுக்காக கண்டனத்தையும் கூறிகொள்கிறேன்.
மனிதத்தை மீட்டெடுத்த மாமழை மனிதத்தை மீட்டெடுத்த மாமழை Reviewed by Unknown on Wednesday, January 13, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.