நம்ம ஊரு சென்னை

Chennai old madras
Image Courtesy: sify.com

சென்னை,
இன்று நம் சென்னையின் 374'வது பிறந்த நாள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரம்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலைகள்,பரபரப்பாக வேலைக்கு செல்லும் மக்கள்,வானுயர்ந்து நிற்கும் பல அடுக்குமாடி கட்டிடங்கள், சந்தைக்கு வரும் அனைத்து புது வாகனங்களின் அணிவகுப்பு, ஹோட்டல்களில் அலைமோதும் கூட்டம்,பல மொழி பேசும் மக்கள் என்று சென்னைக்கு பல அடையாளங்களை கூறிக்கொண்டே செல்லலாம்.



சென்னையின் ஒரு முகம் வசதிகள் நிறைந்ததாக இருந்தாலும், மறுபக்கம் கொஞ்சம் வித்தியாசமானது. காற்று புக கூட இடைவெளியில்லாமல் சிறுசிறு வீடுகள் அவர்களுக்குள்ளான வாழ்க்கை சூழல்,அந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டம்,அந்த மனிதர்களின் மகிழ்ச்சியான முகங்கள்.இது சென்னையின் இன்னொருமுகம்.


இந்த இரண்டு வாழ்க்கைக்கும் இடைப்பட்டு நிற்கும் இன்னொரு முகம் .அவர்கள் வேறு யாருமில்லை நிறைய கனவுகளை சுமந்துகொண்டு வாழும் சுமை தாங்கிகள். நம் தமிழகத்தின் வடக்கு முனை துவங்கி தென் எல்லையான கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களின் கனவுகளின் நம்பிக்கையில் இந்த சென்னைக்கு தான் முதலிடம்.

கிராமப் புறங்களிலிருந்து தங்கள் கனவுகளை தேடி இங்கு வரும் அனைவருக்கும் இந்த சென்னை ஒரு அதிசய உலகம். இந்த உலகத்தில் வாழும் மனிதர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை,பழக்க வழக்கங்கள்,மொழி,கலாச்சாரம் என்று அனைத்துமே வித்தியாசமானதாகும். இந்த உலகத்திற்க்கென்று எந்த தனிப்பட்ட கலாச்சாரமும் கிடையாது.இங்கு வாழும் பலத்தரப்பட்ட மக்களின் அனைத்து சாரம்சங்களும் சேர்ந்து உருவானதே இந்த வாழ்க்கைமுறை . இந்த உலகத்தின் சமூக அமைப்பில் நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் அது காலப்போக்கில் தன்னை விரும்பாதவர்களையும் அந்த அமைப்பில் ஒரு அங்கத்தினராக மாற்றி விடும். உறவுகளை பிரிந்து இங்கு வரும் அனைவருக்கும் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் ஒரு உறவு கிடைத்துவிடும்.அது நம் வாழ்க்கையை தீர்மானிக்கிற உறவாக கூட இருக்கலாம்

நம் சென்னைக்கு முக்கியமான அடையாளங்கள் சில உண்டு,அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தின் கடைகோடி பாமரனையும் கட்டி இழுக்கும் கோலிவுட். தமிழகத்தை ஆளும் முதல்வர்களை தந்த அடையாளம்.இது சென்னையின் முக்கியமான அடையாளம்.ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரீனா,உயிரியல் பூங்கா என்று அடுக்கி கொண்டே போகலாம்.ஏன் இங்குள்ள சாலைகளில் வாகனம் ஓட்டுவது கூட சாகசம் தான்.
Phoenix market city

இந்த 374 ஆண்டுகளில் நம் சென்னை பல ஆட்சி முறைகளை கண்டுள்ளது.நம் சென்னையின் முந்தைய பெயர் மெட்ராஸ் (அ) மதராஸ்  1996ம் ஆண்டு முதல் சென்னை என்று மாறியது,காரணம் மெட்ராஸ் என்பது போர்ச்சுகீசியர்கள் வைத்தது என்பதால். நம் நவீன இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடைந்த நகரங்களுள் நம் சென்னைக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. உலகின் முக்கியமான 35 பெரிய நகரங்களுள் சென்னைக்கும் ஒரு இடம் உண்டு.உலகின் பல முக்கியமான தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளின் முக்கியமான இலக்குகளுள் ஒன்று நம் சென்னை.உலகின் அனைத்து சிறப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் ,கல்லூரிகள் என்று சென்னைக்கு அழகு சேர்க்கும் பல விஷயங்கள் உள்ளன.காலப்போக்கில் அதன் எல்லையும்,மக்கள் தொகையும் விரிவடைந்துக் கொண்டே செல்கின்றது..
Mahabalipuram near by Chennai

 சென்னயை பிடிக்காமல் இங்கு வந்தவர்கள் இருக்கலாம்,சென்னையை பிடிக்காமல் இங்கிருந்து சென்றவர்கள் யாரும் இருக்க முடியாது.நம்ம ஊரு சென்னைக்கு நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்து கூறுவோம்.
நம்ம ஊரு சென்னை நம்ம ஊரு சென்னை Reviewed by Unknown on Thursday, August 22, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.