யார் இங்கே கடவுள்?

religious fate
 இந்தியா என்றவுடன் உலகில் உள்ள அனைத்து மக்களின் எண்ணங்களிலும் வரும் முதல் நினைவே நம் நாட்டின் ஆன்மீக தளங்களும் , ஆன்மீக புராணங்களும் தான்.இன்றும் பலர் நிம்மதியை தேடி செல்லும் இடம் கோவில் மட்டும் தான்.நம் தேசம் பல மகான்களை கண்ட தேசம்.இது பல சித்தர்கள் வாழ்ந்த தேசம்.இன்றும் நம்மில் அவர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட நம் தேசத்தின் பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம். காரணம் ஆன்மீகத்தை வியாபார ரீதியாக, ஒரு போக பொருளாக பார்க்க துவங்கியவர்களால் வந்த வினை.

தினம் தினம் நாம் படிக்கும் செய்தி போலிச் சாமியார்கள் கைது, போலிச்சாமியாரின் பாலியல் அட்டகாசங்கள் இது போன்று பல செய்திகள் தினம் தினம் தினம் வந்து கொண்டு தான் உள்ளது. இது ஒரு மதம் என்பதை தாண்டி எங்கும் பரவி கிடக்கிறது . யார் இந்த போலிச் சாமியார்கள்? இவர்களை வளர்த்து விட்டது யார்? இது போல பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம் .இது அத்தனைக்கும் ஒரு காரணம் நாம் மட்டுமே!!!.

நம் அளவுக்கதிகமான நம்பிக்கையே இவர்களை போன்றோரின் வளர்ச்சிக்கு காரணம். கடவுள் என்பவன் எங்கும் எதிலும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறான் என்பதை நம்பும் நாம் எதற்காக யாரோ ஒருவர் நான் கடவுளின் அவதாரம் என்று கூறியவுடன் கண்ணை கட்டிக்கொண்டு காலில் விழுந்து விடுகிறோம். அங்கு விழும் நம் நம்பிக்கையின் விளைவு கடைசி வரை விழுந்தவரின் அறிவுக்கண்ணை திறக்க விடாமலே செய்து விடுகின்றனர். 

நம் தேசம் பல மகான்கள் வாழ்ந்த தேசம் இரமண மகரிஷி ,விவேகானந்தர் ,வள்ளலார் போன்று பலர் வாழ்ந்து சேவை புரிந்த தேசம். இவர்களில் பெரும்பாலானவர்களின்  உபதேசங்கள் கடவுளை மனிதனில் பாருங்கள் என்பதே.மனிதனுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதே .நிச்சயம் இது தான் உண்மையான ஆன்மிகம் ,இது தான் உண்மையான வழி நடத்தல்.

ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பதென்ன,அமைதியை தேடி அலைந்து கொண்டிருப்பவரின் எண்ணம் அறிந்து அவரின் அறிவை மழுங்கடித்து ஆயுள் முடியும் தன்னையே சார்ந்து இருக்கும் படி செய்யும் இவர்களை போன்றோர்கள் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,நாமும் ஏமார்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.

கடந்த தலைமுறையை ஒப்பிடும் பொழுது இன்றைய  தலைமுறையினருக்கு இறை நம்பிக்கை என்பது குறைவு, இதே அடுத்தடுத்த தலைமுறைகள் தாண்டும் பொழுது இறை நம்பிக்கையும் குறைந்து கொண்டே சென்று விடும். இதற்கு காரணம் இவர்களை போன்ற போலி ஆசாமிகள் . இதே நிலை தொடருமானால் நம் ஆன்மீக தேசத்தின் பெருமைகள் இன்று பெட்டிகளில் தூங்கும் நம் வரலாற்றை போல ஆகிவிடும் என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை.


யார் இங்கே கடவுள்? யார் இங்கே கடவுள்? Reviewed by Unknown on Wednesday, September 04, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.